மிட்டாய் கவிதைகள்!

இவைகள் கூடப் பேசும்!

July 20, 2013

college

வலியால் துடிக்கும்
பேருந்தின் படிக்கட்டுகளைக்
கேட்டுப் பாருங்கள்
புலம்பிக் கொண்டே அது சொல்லும்
“இவர்கள் நட்பைக்
காட்ட ஏழெட்டு
பாதங்களை ஒரு சேர
என்மேல் பதிக்கின்றனர்” என்று!

குழப்பத்தில் கிடக்கும்
என் விடுதிக் கண்ணாடியைக்
கேட்டுப் பாருங்கள்
வெகுளியாய் அது சொல்லும்
“ஒற்றைச் சட்டை மட்டும்
ஓரிடத்திலேயே இருக்க
முகம் மட்டும் மாறும்” என்று!

அங்கே ஒடுங்கிக் கிடக்கும்
தட்டுக்களைக் கேட்டுப் பாருங்கள்
சோகக் குரலில் அது சொல்லும்
“என் மேல் கிடக்கும்
ஒற்றை பருக்கை உண்பதற்கு
பத்து கைகள்
போராட்டம் நடத்தும்” என!

தேர்வறையில் என்
விடைத்தாலும் எனைப்
பார்த்து வினவும்
“எமன் ஒருவன்
எதிரில் இருக்க
எவன் பார்வைக்காக
ஏங்கிக் கொண்டிருக்கிறாய்?” என்று!

இவை எல்லாம் என்னிடம் பேச
நான் பெற்ற வரமோ வெறும்
நான்கு ஆண்டுகள்..
இவைகளை ஊமையாக்கி
நானும் இப்போது ஊமையாக!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்